கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. வரும் ஏப்ரல் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு 1.70 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் சார்பிலும் 9,000 கோடி ரூபாய் நிதி தேவை என்று மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்த வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு தன் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவும் நிதி கோரி அழைப்பு விடுத்துள்ளார்.இந்த வகையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரும் தலா 25 லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் கரோனா நிவாரண நிதியாக ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.
திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ்பொய்யாமொழி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் ஆகியோர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 25 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடி ரூபாயை கரோனா நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
இது தவிர திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளும் தலா 20 லட்சம் ரூபாய் வீதம் 60 லட்சம் ரூபாயை கரோனா நிதிக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.