திருச்சி - வையம்பட்டியை அடுத்த அணியாப்பூர் கரடுப்பகுதியில் நேற்று(ஜுன்.09) நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களை, அப்பகுதி கிராம மக்கள் பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது நாங்கள் முயல் வேட்டைக்கு வந்தவர்கள் எனக் கூறியதைக் கேட்டு சந்தேகமடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இந்தத் தகவலை அடுத்து, சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறையினரிடம் அப்பகுதி மக்கள் இரு நபர்களும் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறினர்.
இதையடுத்து, அவர்கள் விட்டுச் சென்ற வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வையம்பட்டி காவல் துறையினர் தப்பி ஓடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் நாட்டுத் துப்பாக்கியுடன் வீதியுலா வந்த நபர்கள் தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு நியாயவிலைக் கடையில் காலாவதியான கோதுமை மாவு விற்பனை!