தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி வரும் 16ஆம் தேதி முதல் முன் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டிற்கு வந்த தடுப்பூசி திருச்சி சென்றடைந்தது. அதன்பின்னர், தடுப்பூசி திருச்சி சுகாதார மண்டலத்திற்கு உள்பட்ட திருச்சி தஞ்சை, திருவாரூர் நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் இருந்து இந்தத் தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வனிதா, திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சித்ரா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "முதல்கட்டமாக தமிழ்நாட்டில் பணியாற்றும் முன் களப்பணியாளர்கள் ஆறு லட்சம் பேருக்கு வரும் 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு செலுத்துவதற்காக 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. ஒத்திகை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு தயார் நிலையில் அரசு உள்ளது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நகர சுகாதார மையம், ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தினமும் 100 பேருக்கு செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. முன்கள பணியாளர்கள் முடிந்த பின்னர் பொதுமக்களுக்கு செலுத்தப்படும்.
தடுப்பு ஊசி ஒரு நபருக்கு இரண்டு (டோஸ்) முறை செலுத்த வேண்டும். முதல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு 14 நாள்களுக்குப் பிறகு அடுத்த தடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம் தடுப்பூசி செலுத்தப்பட்டு 42 நாள்களுக்குப் பின்னரே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அனைத்து பரிசோதனைகளையும் முடித்த பின்னரே தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.
இது தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி முன்கள பணியாளர்கள் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள முடியும்.
இதன் காரணமாக முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை. அவசியம் ஏற்பட்டால் மக்களின் அச்சத்தைப் போக்க நான் தடுப்பூசி செலுத்தி கொள்வேன். தடுப்பூசி செலுத்திய பின்னர் 30 நிமிடங்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை செய்ய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்காமல் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து இருக்க வேண்டும். இந்திய மருத்துவ கழகத்துடன் இணைந்து தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக பல தனியார் மருத்துவமனைகள் முன்வந்து பதிவு செய்துள்ளனர்" என்றார்.