திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திருவள்ளுவரை அவமதித்தவர்கள் மீதும், மதச் சாயம் பூச முயற்சித்தவர்கள் மீதும் தமிழ்நாடு அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தொகை அடிப்படையில் தலித், பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புதிய மாவட்டங்களிலும் இதை கடைபிடிக்க வேண்டும். மேலும் துணைமேயர், துணைத் தலைவர், போன்ற பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்” என கூறினார்.
நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எவ்வித சங்கடமும் கிடையாது. நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது, சிவாஜியும் அரசியலுக்கு வந்ததால் இரு பெரும் தலைவர்களை மக்கள் ஏற்கவில்லை. அதனால் சிவாஜி அரசியலில் சிறப்பாக விளங்க முடியாமல் போனது. இந்த அடிப்படையில்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியிருக்க வேண்டும்” என்றார்.