திருச்சி: அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரது வீட்டில் தாய் சாந்தி(70), மனைவி விஜயலட்சுமி(38) மற்றும் 2 பெண் குழந்தைகள் (பிரதீபா, ஹரிணி) என 5 பேர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வசித்து வந்த வீடு 1972ல் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது.
மாரிமுத்து தனது தங்கையின் கணவர் இறந்து விட்டதால், அந்த துக்க நிகழ்ச்சிக்காக நேற்று சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் வழக்கம்போல் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் உறங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், இடிப்பாடுகளில் சிக்கிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து நள்ளிரவில் நிகழ்ந்ததால், அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மாடியில் இருந்து ஏதார்த்தமாக பார்த்த பொழுது, மாரிமுத்து வீட்டின் மேற்கூரை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்து, அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் இடர்பாடுகளில் சிக்கி இறந்து கிடந்த நான்கு பேர்களின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இறந்த விஜயலட்சுமியின் சகோதரர் சொக்கலிங்கம் கூறுகையில், "எனது அக்காவின் கணவர் துக்க நிகழ்விற்காக வெளியூர் சென்று இருந்தார். கட்டடம் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டது குறித்த தகவல் எங்களுக்கு காலை 8 மணிக்கு தான் கிடைத்தது. இறந்த எனது அக்காவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் இழப்பீடுகள் வழங்க வேண்டும்" என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
உறவினர் செந்தாமரை கூறுகையில், பழைய வீட்டில் குடியிருந்ததால் தற்போது 4 பேரும் இறந்துவிட்டனர். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தமிழ்நாடு பார்க்க வேண்டும். நேற்று கூட என்னிடம் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தார். மாரிமுத்துவும் உடல்நிலை முடியாத நபர், ஆகையால் தமிழ்நாடு எதாவது உதவி செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.