நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் எழுந்திருந்த சூழலில், எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவேன் என அவர் கூறியதால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருக்கு ஆதரவாக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறுவதற்கான கையெழுத்து இயக்கம் நடைபெறுமென மக்கள் சமூக நீதிப் பேரவை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்தப் பேரவையின் மாநில அமைப்பாளர் கோவிந்தன் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,”கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்துள்ளன. அண்ணன் தம்பி போல் இரண்டு கட்சிகளும் ஊழலில் ஈடுபட்டுள்ளன. அரசியலில் மாற்றம் வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர்களும், பெண்களும் விரும்புகின்றனர். மாற்று தலைவர் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவாக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறுவதற்கான கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழலற்ற ஆட்சி அளிக்க ரஜினி முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி, இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. 2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 25 மாவட்டங்களில் ரஜினிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். தற்போது நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை. எங்களது கொள்கையும் ரஜினியின் கொள்கையும் ஒன்றாக உள்ளது. ஊழல் ஒழிப்பு, நதிநீர் இணைப்பு மூலம் விவசாயிகள் மேம்பாடு போன்ற அவரது கொள்கைகள் வரவேற்கத்தக்கதாகும். ரஜினி பாஜகவினரையும்தான் விமர்சனம் செய்கிறார். அதனால் ரஜினிக்கு பாஜக சாயம் பூசக்கூடாது” என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஆசை இல்லை: நடிகர் ரஜினிகாந்த்