திருச்சி ரயில் பணிமனையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 11 பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதமாக போலி பணி அழைப்பு ஆணை, ரயில்வே துறை முத்திரை போடப்பட்ட போலிச் சான்றிதழ்கள் ஆகியவற்றை அளித்து தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர்.
இதனை நம்பி வேலைக்கு ஏற்றவாறு ஒரு லட்ச ரூபாய் முதல் ஆறு லட்ச ரூபாய் வரை பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கொடுத்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமையன்று ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் மோசடியில் ஈடுபட்ட சத்திய மூர்த்தியை சென்னையில் கைது செய்தனர்.
பின்னர் சத்திய மூர்த்தியை சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல பேர் இவருடன் கூட்டாளியாகச் செயல்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சாய் பாலாஜி (45), ராஜ்குமார் (42) இவர்களை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இவர்களிடமிருந்து 40 ஆயிரம் பணத்தையும் 15 சவரன் நகையையும் காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.