திருச்சி மாவட்டம், கீழ்கல்கண்டார், கோட்டைப் பகுதியில், பாதாளச் சாக்கடை கழிவுநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், துர்நாற்றம் வீசும், தொற்றுநோய் பரவும் என்றும்; அவர்கள் அச்சம் அடைந்து எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியிடம் பலமுறை புகார் மனு அளித்தனர். ஆனால், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து கீழ்கல்கண்டார், கோட்டைப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று(ஜூன் 16) பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் பெண்கள் சிலர் கையில் வேப்பிலையுடன், சாமி வந்ததைப் போல் ஆடி ஆக்ரோஷமான போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பின்னர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், மக்களிடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டுத் திரும்பினர்.