திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தேவராயநேரியில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இதன்மூலம் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரியை சிலர் ஆக்கிரமித்ததால் 2014ஆம் ஆண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் எரியின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படவில்லை.
இந்நிலையில் சென்ற வாரம் அசூர், தேனேரிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 40 அண்டுகால ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினர் அகற்றியுள்ளனர். இருப்பினும் தேவராயநேரி எரியின் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
இதனால் இன்று (அக.13) அப்பகுதி மக்கள் பொதுப்பணித் துறை அலுவலகத்திற்கு வந்து தேவராயநேரி ஏரியின் ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருப்பசாமி என்பவர் பேசியதாவது, "திருச்சியிலேயே தேவராய நேரி ஏரிதான் மிகப்பெரிய ஏரியாகும். மொத்தம் 360 ஏக்கர் பரப்பளவில் 200 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது.
ஆக்கிரமிப்பு காரணமாக ஏரியின் நீர் கொள்ளளவு மிகவும் குறைந்துவிட்டது. நீதிமன்ற உத்தரவை நீண்ட நாள்களாக அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருச்சி- தஞ்சை சாலையில் தொடர் மறியல் போராட்டத்தல் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் ஆக்கிரமிப்பு செய்த சுடுகாட்டை மீட்டுத் தர கோரிக்கை!