தமிழ்நாட்டில் கரோனாவின் கோரதாண்டவத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுவரை, ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,144 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளின் அதிகரிப்பால் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் தனியார் மருத்துவமனைகளின் உதவியும் அரசிற்கு தேவைப்படுகிறது.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அரசுக்கும், மக்களுக்கும் தோளோடு தோளாக நிற்க வேண்டிய தனியார் மருத்துவமனைகள், இந்தக் கரோனா காலத்திலும் காசு பார்த்து கல்லா கட்ட நினைப்பது ’எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்று பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கருதி செயல்படுவது வேதனையளிப்பதாக பொதுமக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 135 தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 110 தனியார் மருத்துவமனைகள், 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் அடங்கும். அந்த வகையில், திருச்சியில் தேவதானம் ஜிவிஎன் மருத்துவமனை, மணப்பாறை சிந்துஜா மருத்துவமனை, தென்னூர் மாருதி மருத்துவமனை, தென்னூர் காவேரி மருத்துவமனை ஆகிய ஐந்து மருத்துவமனைகளில் முதற்கட்டமாக கரோனாவுக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக புத்தூர் சுந்தரம், அப்பல்லோ, எஸ்ஆர்எம் உள்ளிட்ட மேலும் சில மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்களது சொந்த செலவில்தான் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த வகையில், கரோனா தொற்றால் பாதிக்கப்படும் வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு நோய், இதயக் கோளாறு போன்று ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கரோனாவின் வீரியத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்துவருகின்றனர். இத்தகைய உயிரிழப்பு திருச்சி தனியார் மருத்துவமனைகளில் அதிகளவில் ஏற்படுவதாக மாவட்டச் சுகாதாரத் துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கரோனாவின் தீவிரத்தால் ஆபத்தான நிலையை அடையும் நோயாளிகளை அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு மாற்றும் செயல்களில் சில தனியார் மருத்துவமனைகள் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் உயிரிழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முடிந்தவரை பணத்தைப் பெற்றுக்கொண்டு கடைசி நேரத்தில் நோயாளிகளைக் கைகழுவும் செயலை தனியார் மருத்துவமனைகள் அரங்கேற்றிவருகின்றன.
இதுமட்டுமில்லாமல், கரோனாவைக் காரணம் காட்டி இதர அவசர நோய்களுக்கும் சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்புத் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாரடைப்பு, விபத்தால் ஏற்படும் காயம் போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்க ஆரம்பத்தில் மறுத்துவிட்டு, பின்னர் அதிகப்படியாக செலவாகும் என்று ரமணா பட பாணியில் உறவினர்களிடம் பேரம் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது.
முதலில் கரோனா பரிசோதனை முடிவுவந்த பின்னர்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. அறுவைச் சிகிச்சை போன்றவற்றுக்கும் பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட பல்வேறு கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் காரணம் காட்டி சிகிச்சை கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி வசூலிப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றஞ்சாட்டுகளைப் பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.
பெரிய மருத்துவமனைகளில் இந்த நிலை என்றால் சிறிய மருத்துவமனைகளில் நோயாளிகளை மருத்துவர்கள் நேரில் பார்ப்பதையே தவிர்த்துவருகின்றனர். இத்தகைய மருத்துவமனைகள் வாசலிலேயே நோயாளிகளை உட்கார வைத்து செவிலியர், பணியாளர்கள் மூலமே நோயாளிகளுக்கு ஊசி போடுவது, கட்டு கட்டுவது உள்ளிட்ட இதர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பின்னர் மருத்துவரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு நோயின் தன்மை, வயது உள்ளிட்ட நோயாளிகளின் விவரங்களைக் கூறி, மருந்து, மாத்திரைகளை செவிலியர் கேட்டு நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்கின்றனர்.
கரோனா அச்சம் காரணமாக மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை இருக்கவேண்டியது அவசியமான ஒன்றுதான். அதே சமயம் இதுபோன்ற ஒரு அச்சம் செவிலியருக்கும், பணியாளர்களுக்கும் ஏற்படும். இவர்கள் பாதுகாப்பு கவச உடை இல்லாமல் வெறும் மாஸ்க் மட்டுமே அணிந்துகொண்டு நோயாளிகளைக் கையாளும் நிலையைப் பார்க்கமுடிகிறது. மருத்துவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது போன்று செவிலியர் உள்ளிட்ட பணியாளர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கடைப்பிடிக்கச் செய்து நோயாளிகளைக் கையாள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளின் இத்தகைய நிலைப்பாட்டால் கரோனா நோயாளிகள் மட்டுமின்றி இதர நோயாளிகளும் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பலரும் அரசு மருத்துவமனையையே நாடிச் செல்கின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பிவழிகிறது. இதைச் சமாளிக்க முடியாமல் அங்குள்ள மருத்துவர்கள் தவித்துவருகின்றனர்.
அதேபோல் அரசு மருத்துவமனைகளில் கரோனா தீவிரம் காரணமாக உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவர்கள் நேரடியாகச் சிகிச்சை அளிக்கின்றனர். மற்றபடி லேசான காய்ச்சல் மற்றும் கரோனா அறிகுறிகளுடன் திடகாத்திரமாக இருக்கும் நோயாளிகளுக்கு செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக சுகாதாரத் துறை அலுவலர்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ”கரோனா பரிசோதனை முடிவு வரும்வரை இதர நோய்களுக்கு சிகிச்சை அளிக்க காத்திருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட நோயாளிகளைக் கரோனா நோயாளியாகக் கருதி உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
கரோனா காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக கை எடுத்துக் கும்பிடும் இடத்தில் மருத்துவமனைகளை, மக்கள் தங்கள் மனதில் வைத்துள்ளனர். ஆனால், அதற்குத் தகுதியாக இந்தத் தனியார் மருத்துவமனைகள் நடந்துகொள்கின்றனவா என்றால், அது கேள்விக்குறியே!
இதையும் படிங்க:அமைச்சர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றது ஏன்? அமைச்சர் காமராஜ் விளக்கம்