திருச்சி: திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, புதுச்சேரி உள்ளிட்ட 8 இடங்களில் ப்ரணவ் ஜூவல்லர்ஸ் செயல்பட்டு வந்தது. இதன் விளம்பர தூதுவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகைகள் ராதிகா, சைத்ரா ரெட்டி ஆகியோர் இருந்தனர்.
இந்த நகைக் கடைகளின் உரிமையாளர்களான மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் பொதுமக்களைக் கவரும் வகையில் மாதாந்திர நகைச் சீட்டு நடத்தியும், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டும், வாடிக்கையாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்தனர்.
மாதாந்திர சீட்டு முதிர்வு காலம் முடிந்த பிறகு, நகைகளைக் கேட்ட வாடிக்கையாளர்களிடம் சாக்கு, போக்கு சொல்லி சமாளித்து வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் தமிழகம் முழுவதும் உள்ள ப்ரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையின் அறிவுரையை ஏற்று பாதிக்கப்பட்டவா்கள் அந்தந்த மாவட்ட காவல் நிலையங்களில் புகார் மனு அளித்தனர்.
மேலும், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த அனைத்து நகை கடைகளையும் மூடி விட்டு, அதன் உரிமையாளர்களான மதனும், அவரது மனைவி கார்த்திகாவும் தலைமறைவாகி விட்டனர். இந்த இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் ப்ரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளரான மதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரது மனைவி கார்த்திகா முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார் மதனின் மனைவி கார்த்திகாவை இன்று(டிச.14) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உரிமையாளர் மனைவி கார்த்திகாவிடம் இருந்து ரூ.52,000 பணம் மற்றும் 2 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: இளையராஜா இசையில் ‘80’ காலகட்டத்தில் உருவாகி இருக்கும் வட்டார வழக்கு; டிசம்பர் 29 ரிலீஸ்