தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே மூப்பனார் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் விவசாயிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்த விழாவிற்கு அக்கட்சித் தலைவர் ஜி.கே வாசன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜி.கே. வாசன் பதிலளிகையில், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சட்டம் தனது கடமையை செய்துள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம் என்பது நிரூபணமாகியுள்ளது. விசாரணைக்கு பின்னர் தான் என்ன நிலை என்பது தெரியவரும்.
நீதிமன்ற தீர்ப்பை பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லை. சிதம்பரம் மூத்த வழக்கறிஞர். குற்றச்சாட்டுகளையும், வழக்குகையும் அவரே எதிர் கொள்வார். இதற்காக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவதும் வாடிக்கையான விஷயம் தான். சிபிஐ விசாரணை, அதற்குப் பின்னர் நீதிமன்றம் உத்தரவின் முடிவுகளைப் பொறுத்து தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் சாயம் உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு செல்ல வேண்டும். இந்த நாடு சட்டத்திற்கு உட்பட்ட நாடு என்பதில் சந்தேகமில்லை என்றார்.