திருச்சி கண்டோன்மென்ட் எம்ஜிஆர் சிலை ரவுண்டானா அருகே நேற்று (ஜூன் 29) சீருடை அணிந்த காவலர் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும், முதியவர் ஒருவரின் மிதிவண்டியும் மோதிக்கொண்டன. இதனிடையே நிகழ்ந்த வாக்குவாதத்தின்போது, முதியவரின் கன்னத்தில் காவலர் அறைந்தார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனால், முதியவரைத் தாக்கிய காவலர் குறித்து விசாரணை நடத்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜூ உத்தரவிட்டார். அதன்பேரில் எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, ஐயப்பன் கோயில் சாலை பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து காவலர்கள் ஆய்வு செய்தனர்.
அதில், திருச்சி மாநகரம் உறையூர் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு பிரிவு தலைமைக் காவலராகப் பணிபுரியும் இளங்கோ என்பது தெரியவந்தது. பின்னர், அவரிடம் காவல்துறை உயர் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். முதியவர் தகாத வார்த்தை கூறியதாகவும், அதன் காரணமாகவே அவரை தாக்கியதாக இளங்கோ விளக்கம் அளித்தார்.
எனினும், காவல்துறை சீருடை அணிந்துகொண்டு பொது இடத்தில் முதியவரை தாக்கியது தவறு என்பதால் இளங்கோவை திருச்சி மாநகரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் வரதராஜூ உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: குங்குமமும் வேண்டாம் வளையலும் வேண்டாம்' அடம் பிடிக்கும் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த உயர் நீதிமன்றம்