பாலியல் வன்முறையில் சிக்கும் பெண்கள், குழந்தைகள் தொடர்பாக ஊடகங்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்த கருத்தரங்கம் திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் அருகே உள்ள காவலர்கள் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், ’இந்திய தண்டனை சட்டப் பிரிவு 228, 23 போக்சோ, சிறுவர்கள் சட்டத்தில் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகும் பெண்கள், குழந்தைகளை அடையாளங்களை மறைமுகமாகவோ, நேரடியாகவோ வெளியிடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய அடையாளங்களை வெளியிட்டு அவர்களை மனதளவிலும், உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஊடகங்கள் பின்பற்ற வேண்டும். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அலுவலர்கள், சாட்சிகள், அரசு வழக்கறிஞர்களுக்கு தற்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் வகையில் திருச்சி கழகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் தலா ஐந்து பள்ளிகளை தேர்வு செய்து, மொத்தம் 25 பள்ளிகளில் காவல் துறை கிளப் தொடங்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறை சூழலில் சிக்கும்போது எப்படி தப்பிப்பது, தற்காப்பு கலைகளை பயன்படுத்துவது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அங்கு கற்றுத் தரப்படும்.
இது தவிர பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் கிராமங்கள்தோறும் காவல் துறை கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் நேரடியாக சென்று அவர்களுக்கு உள்ள பிரச்னையை ஆராய்ந்து, கேட்டறிந்து தீர்வு ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் திருச்சி சரகத்தில் 225 பேர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தண்டனை பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு சரித்திர பதிவேடு உருவாக்கி தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றோம்.
மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். இந்தக் குற்றத்திற்காக கைது செய்யும்போது சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் யாருடைய புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. தண்டனை பெற்ற குற்றவாளிகளை தவிர இதர நபர்களின் புகைப்படங்களை வெளியிட முடியாது என்றார்.
இதையும் படிங்க: பேச மறுத்ததால் ஆத்திரம்: மாணவியை தாக்கிய மாணவர்