திருச்சி: திருச்சி பன்னாட்டுச் சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு விமான தினசரி விமானகள் இயக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாகத் தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளைக் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக ஆகி வருகிறது.
இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் வந்தது. விமானத்தில் பயணி ஒருவர் சட்ட விரோதமாகத் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவர் நூதன முறையில் சட்ட விரோதமாக ஹேர் டை கிரைண்டர் மிஷினில் மறைத்து வைத்திருந்த தங்கம் கண்டறியப்பட்டது. கடத்தப்பட்ட ரூபாய் 9 லட்சத்து 64 ஆயிரத்து 176 மதிப்பு உள்ள 159 கிராம் எடை உள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் தங்கம் கடத்திய அந்தப் பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில், தங்கம் கடத்தலில் பிடிபட்ட நபர் இதற்கு முன்பு தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா?, மேலும் அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் உண்மையானதா?, வேறு வழக்குகள் ஏதும் அந்த நபர் மீது உள்ளதா?, இவர்களுக்குப் பின்புலமாக யாரெல்லாம் செயல்படுகிறார்கள்?, எந்த நோக்கத்திற்காகத் தங்கம் கடத்தி வரப்பட்டது? என பல்வேறு கோணங்களில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை அடுத்து விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அந்தப் பயணியை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சில காலமாகத் திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், உயிரினங்கள் போன்றவற்றைக் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.
மேலும், கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் தொடர்ந்து பறிமுதல் செய்தாலும் கடத்தலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: 4வது நாளாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை..சச்சிதானந்தம் வீட்டில் கிடைத்தது என்ன?