திருச்சி: அரியமங்கலம் அருகேவுள்ள அம்பிகாபுரத்தைச் சேர்ந்தவர், பூமாரி. இவர் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் உள்ளிட்டவைகளை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்றிரவு (ஏப்.17) வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். பின்னர், இன்று (ஏப்.18) அதிகாலை வந்து பார்த்தபோது கடை ஷட்டரில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், கடையில் வைத்திருந்த 2ஆயிரம் ரூபாய், இரண்டு கிலோ நெய் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதேபோல் அருகிலுள்ள ராஜாமுகமது என்பவரது மளிகைக்கடையின் பூட்டை உடைத்து குளியல் சோப்புகள், துணி துவைக்கும் சோப்புகள், டூத்பேஸ்ட், உப்பு, மிளகாய், தின்பண்டங்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
மேலும், இவர்களது கடைக்கும் எதிர்ப்புறம் உள்ள சண்முகசுந்தரத்திற்கு சொந்தமான அரிசி மற்றும் மளிகை வியாபாரம் செய்யும் கடையிலும் 12 ஆயிரம் ரூபாய் பணம், டிவி ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதேபோல் அம்பிகாபுரம் கல்கண்டார் கோட்டைச்சாலையில் செல்போன் கடை மற்றும் மளிகை கடைகளில் திருட்டுச்சம்பவம் நடைபெற்றது. செல்போன் கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள், புளு டூத் ஹெட் செட்கள் திருடு போயிருந்தன.
மேலும், கிஷோர் குமார் என்பவரது மளிகைக்கடையில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் மளிகை பொருள்களும் திருடுபோயின. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியமங்கலம் காவல் துறையினர், ஒரே பகுதியில் அடுத்தடுத்துள்ள கடைகளில் திருட்டுச்சம்பவம் நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து திருட்டுச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரியமங்கலம் காவல் துறையினர், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: CCTV: சைடு லாக்கை உடைத்து பைக் திருட்டு - பெண் ஏட்டு வீட்டில் அசால்ட் காட்டிய திருடன்