திருச்சி: மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள இந்திரா திரையரங்கம் அருகில் ஓய்வு பெற்ற இரயில்வே பாதுகாப்புப்படை வீரர் முகத்துப்பாண்டி என்பவர் போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். கடையினை அவரது மகன் சந்தோஷ் நிர்வகித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி அன்று இரவு கடையினை பூட்டிவிட்டு சென்ற சந்தோஷ் மறுநாள் காலை கடையினை திறக்க வந்த போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடைக்குள் இருந்த கேமராக்கள், லென்ஸ்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஸ்டூடியோ உபகரணங்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற மணப்பாறை காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகமூடி கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 7) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான தனிப்படையினர் சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் கட்டை பையோடு சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அந்த நபர் தனது சொந்த ஊர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் என்றும், தனது கல்யாண நாளை கொண்டாடுவதற்காக இங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாகவும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவர் திருச்சி சாலையில் உள்ள ஸ்டூடியோவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
மேலும், தற்போது வழக்கம் போல் கொள்ளையடிக்க வந்திருப்பதாகவும், அதற்காக இரண்டு இடங்களை நோட்டமிட்டு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான கேமராக்களை பறிமுதல் செய்து முகமூடி கொள்ளையரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையின்போது, தான் கடந்த பத்து வருடங்களாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தன் மேல் 350 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்த நிலையில் 250 வழக்குகள் லோக் அதாலத் முறையில் முடிவடைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அவர் மீது இன்னும் 120 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பல திடுக்கிடும் தகவல்களை கூறி காவல்துறையினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். கடந்து பத்து வருடங்களாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளையன் மணப்பாறை காவல்துறையினரிடம் சிக்கியது முதல் தடவை ஆகும்.