திருச்சி: உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் விழா வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு, இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.19) சென்னையில் நடைபெறும் 'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்கவுள்ளார். அதன்பின்னர், நாளை (ஜன.20) காலை அயோத்தி ராமரின் குல தெய்வமாகக் கருதப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தில் இருந்து ஆலயத்தின் சுற்றியுள்ள அனைத்து தெருக்களில் வசிக்கும் மக்கள் அனைவரிடமும் அவரவர்களின் விவரங்களை சேகரித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தமிழகம் வருகை! எங்கெல்லாம் செல்கிறார்? முழுத் தகவல்!
மேலும், வெளி நபர்கள் யாராவது தங்கியுள்ளார்களா? என்றும், ஸ்ரீரங்கம் கோயில் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ளடங்கிய அனைத்து கடைகளையும் பாதுகாப்பு கருதி அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பிரதமர் மோடி திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், ஸ்ரீரங்கம் கோயிலின் வடக்கு கொள்ளிட கரையில் இருக்கும் பஞ்சக்கரை பகுதியில் ஹெலிகாப்டரை தரை இறக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் ஹெலிபேட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வருகை தருவதை முன்னிட்டு, இன்று மாலை 6 மணி முதல் நாளை பிற்பகல் 2:30 மணி வரை கோயிலிக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி, திருச்சி மாநகரம் முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "தமிழக - இலங்கை மீன்வள அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு" - கிழக்கு மாநில ஆளுநர் செந்தில் தொண்டைமான்!