முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில தினங்களாக நபிகள் நாயகம் குறித்து அவதூறு செய்திகள் பரப்பப்படுவதாக இஸ்லாமியர்கள் , இஸ்லாமிய அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கட்சியினர் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து காவல் ஆணையர் லோகநாதனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், " முகநூல் பக்கங்களில் நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவான முறையில் பதிவிட்டு வருபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து தமுமுக-வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல், தேசிய தவ்ஹித் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
கேலிச்சித்திரம் வெளியிட்ட கார்ட்டூனிஸ்ட் வர்மா என்கிற சுரேந்தரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நபரை காவல்துறையினர் பிடித்து கிரிமினல் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இருப்பினும் இதுபோன்ற மத கலவரத்தை தொடர்ந்து பரப்பி வரும் கிஷோர் கே சாமி போன்ற சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும் நபிகள் நாயகத்தை கேலி சித்திரம் வரைந்த அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலும் நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர் நஜீர் அஹமத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பிரதிநிதிகள் இப்ராஹிம், சம்சுதீன், அரியமங்கலம் முஸ்தாபா, இஸ்மாயில்,ஜாகீர் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.