கரோனா பரவல் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம், ஜோசப் கல்லூரி, எஸ்.ஐ.டி. கல்லூரி வளாகம், மதுரம் மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிக சந்தைகளாகச் செயல்பட்டுவருகின்றன. இதற்கிடையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கே. கள்ளிக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த காய்கனி வணிக வளாகத்திற்கு காந்தி மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால், வியாபாரிகள் அங்கு செல்ல மறுப்புத் தெரிவித்துவந்தனர். இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காந்தி மார்க்கெட்டை கே. கள்ளிக்குடி வணிக வளாகத்திற்கு மாற்ற வேண்டும் என வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருச்சி காந்தி மார்க்கெட் செயல்பட இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் காந்தி மார்க்கெட் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனை எதிர்த்து வியாபாரிகள் பலகட்ட போராட்டங்களை அறிவித்தனர். இந்நிலையில் இன்று (நவ. 26) மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டார்.
தற்போது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் கமலக்கண்ணன், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக காந்தி மார்க்கெட் தூய்மை செய்யும் பணி தொடங்கியுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு காந்தி மார்க்கெட்டில் திறப்பு விழா நடைபெறுகிறது.
இதையும் படிங்க: பாஜக எம்எல்ஏவுடன் பேரம் பேசும் லாலு பிரசாத் யாதவ்: வெளியான ஆடியோ விவகாரம்