ஒரு சமூகத்தை பற்றி தவறாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ வைரலானதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சாதி கலவரம் வெடித்துள்ளது.
இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகரான பரதன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பொன்னமராவதியில் ஏப்ரல் 18-ஆம் தேதி கலவரம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு நான்கு நாட்களாக ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்கள் குறித்த அவதூறு ஆடியோ ஒன்று பரவி வந்தது. அந்த ஆடியோவில் தஞ்சை மாவட்ட வேட்பாளர்கள் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆடியோ தமிழகம் முழுவதும் பரவிய போதும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மட்டும் போலீசில் இதுகுறித்து புகார் செய்ய ஒரு அமைப்பினர் முயற்சி செய்துள்ளனர்.
அப்போது தேர்தல் பணி காரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். இதனை தொடர்ந்து போராட்டமும் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த வன்முறையால் அப்பாவி மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தமிழக டிஜிபி மற்றும் முதல்வரை சந்தித்து பொன்னமராவதியில் வன்முறையை தூண்டிய அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். அந்த குறிப்பிட்ட அமைப்பு 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்டது. அப்போது முதலே அவர்கள் மக்களிடம் வன்முறையை அதிகரிக்கும் வகையில் மேடைகளில் பேசி வந்தனர். இதனால் இரு சமூகத்தினருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
அதனால் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும். ஆடியோவில் வெளியான கருத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும், இதை அடிப்படையாகக் கொண்டு கலவரத்தில் ஈடுபட தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும். திட்டமிட்டு இந்த கலவரம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
பரதன் 'நீ நான் நிலா" "பார்த்தது போல இருக்கு" உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.