திருச்சி: மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி பஞ்சாயத்திற்குள்பட்ட பின்னத்தூர் கிழக்குகளம் பகுதி பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை சரி செய்திடும் நோக்கில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அப்பகுதியில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.
குடிநீரின்றி தவிக்கும் கிராம மக்கள்
அதில், ஒரு ஆழ்துளை கிணறுக்கு இதுவரை மின்விநியோகம் வழங்கப்படாமல் உள்ள நிலையில், செயல்பாட்டில் இருந்த மற்றொரு ஆழ்துளை கிணற்றில் இருந்த மின் மோட்டாரும் பழுதுபோனது. இதனை சரிசெய்வதற்காக அதை ஊராட்சி நிர்வாகம் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் விநியோகம் சரிவரக் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பல முறை எடுத்துக் கூறியும் கண்டும், காணாததுபோல் மெத்தனமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
சாலை மறியல்
மேலும், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புத்தாநத்தம் காவல் துறையினர், ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: தடுப்பூசி வழங்கக்கோரி உடையாம்பாளையம் கிராமத்தினர் சாலை மறியல்