திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஆக.14) நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசித்தோம். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு அனுமதி அளிப்பதில்லை. பல மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மின்சார திருத்த சட்டம் நிறைவேறி உள்ளது, இதை எல்லாம் எதிர்த்து கேட்க முடியவில்லை.
மக்கள் நாடாளுமன்றம்
அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்ற பலரின் தொலைபேசியை ஒட்டு கேட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஜந்தாயிரம் இடங்களில் மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.
முதல் நிகழ்வாக தேசிய கொடி ஏற்றுவோம், பின்னர் எப்படி நாடாளுமன்றம் நடைபெறுமோ அதே போல் நடத்த உள்ளோம். கடுமையான நிதி நெருக்கடியில் கூட தமிழ்நாடு அரசு கரோனா நிவாரணமாக ரூ. 4,000 வழங்கியது, பெண்களுக்கு இலவச பயணம் என மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பட்ஜெட்
நேற்று (ஆக.13) பட்ஜெட்டில் பெட்ரோல் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து அறிவிக்கப்பட்டது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டை நாங்கள் வரவேற்கிறோம்.
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்பது வரலாற்று சிறப்புமிக்க செயல். எல்லா இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தர கட்டிடங்களாக மாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்- முதலமைச்சர்