கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழ்நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனினும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக டோக்கன் வழங்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு தகுந்த இடைவெளியுடன் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் எதிர்வரும் புரட்டாசி மாதத்தில் ரங்கநாதர் கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் வர வாய்ப்புகள் உள்ளன.
தற்போது கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால், பக்தர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து கோயிலுக்குள் தரிசனம் செய்ய குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு கோயில் இணையதளத்தில் (www.srirangam.org) கட்டண தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். செப்டம்பர் 19ஆம் தேதி, அக்டோபர் 3ஆம் தேதி, அக்.10ஆம் தேதி ஆகிய நாட்களில் காலை 6.30 மணி முதல் 8 மணி, 8 மணி முதல் 10 மணி, 10 மணி முதல் பகல் 12 மணி, பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி, பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி, மாலை 6 முதல் இரவு 8 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
செப்டம்பர் 26ஆம் தேதி மட்டும் மாலை 4.30 மணிக்கு மேல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எனவே பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யுமாறு கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதலனின் தந்தையை குத்திக் கொலை செய்த பெண் வீட்டார்!