திருச்சி: மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ளது தொப்பநாயக்கன்பட்டி. இங்கு உள்ள காலனி பகுதியில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான முக்கியப் பிரச்னையாக இருந்து வருவது சுடுகாடு தான். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இவர்கள் யார் இறந்தாலும், அப்பகுதியில் உள்ள ஆற்றின் கரை தான் அவர்களுக்கு சுடுகாடு.
அதுவும் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்குள், அடுத்த பிறவி என்று இருந்தால் மனிதனாக மட்டும் பிறக்கக் கூடாது என புலம்பும் நிலைக்கு ஆளாகி வந்துள்ளனர். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுடுகாட்டுக்காக போராடி வந்த நிலையில், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த முத்தன்(வயது 80) என்ற முதியவர், கடந்த எட்டு நாட்களாக உடல்நிலைக் குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த அவரின் உடலை, சொந்த ஊரான தொப்பன்நாயக்கன்பட்டியில் இருக்கும் அவரது குடும்பத்தினர், இன்று காலை எடுத்து வந்துள்ளனர்.
அப்போது ஊரில் இருந்த அவரது உறவினர்கள் சுடுகாடும் இல்லை, சுடுகாட்டிற்கு செல்ல வழியும் இல்லை என உடலை ஊருக்கு எடுத்துச்செல்லாமல் காந்தி நகர் பகுதியில், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பிரேதத்தோடு மறியலில் ஈடுபடப்போவதாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பெயரில் காந்திநகர் பகுதிக்கு விரைந்த வையம்பட்டி காவல் ஆய்வாளர் முருகேசன், குமாரவாடி ஊராட்சி மன்றத் தலைவர் கீதாமணி, வார்டு உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரையும் ஊர் பகுதிக்கு அழைத்துச்சென்று, ’இனி வரும் நாட்களில் பொது சுடுகாட்டு பகுதியின் அருகில் உள்ள இடத்தில் இறந்தோரை அடக்கம் செய்து கொள்ள, நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’ எனக் கூறப்பட்டது.
இதையடுத்து, இறந்தவரின் உடலை ஊருக்குள் எடுத்துச்சென்று வழக்கம்போல், அவர்கள் பயன்படுத்தி வந்த ஆற்றங்கரை பகுதிக்குள்ளேயே உடலை அடக்கம் செய்தனர். இதனால், இறந்த தனது தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக அமரர் ஊர்தியோடு, அவரது குடும்பத்தினர் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டாலும், 40 வருடங்களுக்குப் பிறகு தங்களுக்கு சுடுகாடு அமைத்துக்கொடுத்த ஊராட்சி மன்றத் தலைவரை மனமார வாழ்த்தி சென்றனர்.
இதையும் படிங்க: 'சேவற்கொடி பறக்குதய்யா' - பழனி முருகன் கோயிலில் ரூ.4 கோடி உண்டியல் வசூல்!