திருச்சி மாவட்டம், கருமண்டபம் பகுதியில் கரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ தொகுப்பு வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தடுப்பு மருத்துவத் தொகுப்புகளை பொது மக்களுக்கு வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மணப்பாறை, துறையூர், முசிறி உள்ளிட்டப் பகுதிகளிலும் சிகிச்சை மையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை மட்டும்தான் இருக்கிறது.
ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக பெல் நிறுவனத்தில் கேட்டபோது வெளியில் இருந்து ஆக்சிஜன் வாங்குவதாகத் தெரிவித்தனர்.
மக்களைக் காப்பாற்ற ஆக்சிஜன் உற்பத்தி செய்யத் தேவையான நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்துள்ளோம். இப்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கானப் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தித் தொடங்கும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திமுக மாநகரச் செயலாளர் அன்பழகன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனைகளுக்கு 18ஆம் தேதி முதல் நேரடியாக ரெம்டெசிவர் மருந்து!