தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கான சிறை அங்காடி தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திருச்சி மத்திய சிறையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 250 விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இந்த சிறை கைதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்பு, கார வகைகள் மற்றும் உணவு வகைகள் சிறையில் உள்ள அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சிறை வளாகத்தில் விவசாயத் தோட்டம், வயல்வெளி மற்றும் பண்ணைகள் அமைத்து இயற்கை வேளாண் உற்பத்தியையும் பெருக்கி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி 40 ஆயிரம் செங்கரும்பு அறுவடை செய்து கூட்டுறவு சங்கம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் கைதிகளால் நடவு செய்யப்பட்ட சிறிய வெங்காயம் தற்போது நன்கு வளர்ந்துள்ளது. அதனை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இதுகுறித்து பேசிய சிறை கண்காணிப்பாளர் சங்கர், 'இந்த திட்டத்தின் மூலம் வருகிற வருவாயைக் கொண்டு கைதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறை நலநிதிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இனி வரும் காலத்தில் சிறுதானியங்களும் பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்படும். சிறையில் 80 சதவிகிதம் இயற்கை முறையிலேயே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து 100 சதவிகதம் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும். திறந்தவெளி சிறைச்சாலையில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு தினசரி விற்பனை செய்யப்பட்டுவருகின்றன' என தெரிவித்தார்.
இதையும் படிங்க :கரும்புகள் தீயில் எரிந்து நாசம்: ஆட்சியரிடம் விவசாயி மனு