திருச்சி: மணப்பாறை, வாகைக்குளம் பகுதியில் வசித்து வரும் இலை வியாபாரி, சேவியர். இவருக்கு விடத்திலாம்பட்டி பகுதியில் தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட வீடில்லாத ஏழைகளுக்கான மூன்று சென்ட் நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில், அந்நிலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு அஸ்பெஸ்டாஸ் வீடு கட்டி அங்கு இரவு நேரங்களில் மட்டும் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை திருச்சியைச் சேர்ந்த வக்கீல் ஒருவரின் உதவியாளர் அந்த இடம் தங்களுக்குச் சொந்தம் எனக் கூறியதோடு, சேவியரின் வீட்டை இடித்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்து அங்கு விரைந்த சேவியரின் குடும்பத்தினர், தங்களது வீட்டை இடித்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், அப்பகுதியினரின் உதவியோடு அவர்களை காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில் திருச்சியைச் சேர்ந்த ஏ.ஆர். வேலு மற்றும் அவரது உதவியாளர் உட்பட மூன்று பேர் மீதும் மணப்பாறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த 2002ஆம் ஆண்டு தமிழக அரசால் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட நிலையில் அந்த இடத்தை 2017-ல் பத்திரம் செய்துள்ளதாகக் கூறி, வக்கீல் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள மற்ற குடியிருப்புவாசிகளிடையே பரபரப்பையும்,பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மாமூல் கேட்ட காவலர்: வீடியோ எடுத்து ஓடவிட்ட வாகனஓட்டி