திருச்சி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு முதியோர் இல்லங்களுக்கு டிவி, நலிவுற்ற முதியோருக்கு புடவைகள் வழங்கினார். கோலம், இசை நாற்காலி போட்டி உள்ளிட்டவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
அப்போது ஆட்சியர் சிவராசு பேசுகையில், ‘ஆண்டுதோறும் அக்டோபர் ஒன்றாம் தேதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. முதியவர்களை நாம் முறையாக பராமரிக்க வேண்டும். முதியவர்களுக்கு வேண்டிய வசதிகளை அவர்களது வாரிசுகள் கண்டிப்பாக செய்து கொடுக்க வேண்டும். சரியான முறையில் பெற்றோர்களை வாரிசுகள் பராமரிக்கவில்லை என்றால் சட்டத்தின் மூலம் அதை அமல்படுத்த வழிவகை உள்ளது. தமிழக அரசு சார்பில் முதியோர் நிதி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதோடு தமிழக அரசு சார்பில் முதியோர் இல்லங்களும் நடத்தப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் 24 முதியோர் இல்லங்கள் செயல்பட்டுவருகிறது. இளைய தலைமுறையினர் பெற்றோரை பாதுகாக்க வேண்டும். முந்தைய காலங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை கலாச்சாரம் கடைபிடிக்கப்பட்டது. முதியோர்களின் சிறப்பான பட்டறிவுகள் இளைஞர்களின் வாழ்க்கையை சிறப்பாக வழிவகுக்கும்’ என்றார்.
இதையும் படிங்க:
குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வீடு விற்பனை என்ற விளம்பரத்தால் சர்ச்சை!