திருச்சி என்.ஆர்.ஐ. எஸ் அகாதமி மேலாண் இயக்குநர் விஜயாலயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இடைத்தரகர்கள், அலுவலர்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வில் அரசுக்கு மிகப்பெரும் தேல்வியை எட்டியுள்ளதாக அரசியல் கட்சியினர் பலரும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். நடைபெற்று முடிந்த குரூப் 4 தேர்வில் 99 நபர்கள் தவிர மேலும் பலரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கருதுவதால் இதனை ரத்துசெய்துவிட்டு புதிய தேர்வை நடத்த வேண்டும்.
முறைகேடான தேர்வால் தகுதியற்றவர்கள் பலர் உள்நுழைய வாய்ப்புள்ளது. முறைகேடு செய்தவர்கள் அலுவலர்களாக இருந்தாலும் சரி, மாணவர்களாக இருந்தாலும் சரி, அகாதமி நடத்துபவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் வாழ்நாள் முழுவதும் இயங்கத் தடைவிதிக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் இனிவரும் காலங்களில் நிகழாதவாறு தண்டனை அமைக்கப்பட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கோவையில் கொரோனாவா? - ஆட்சியர் பதில்