குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக உள்பட இந்து அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம், பேரணி நடைபெற்று வருகிறது. இந்து முன்னணி சார்பில் திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோயில் எதிரே சிஏஏவை ஆதரித்து ஒருநாள் தொடர் நாமாவளி கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
இதற்கு இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், உறையூர் பகுதி செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வங்காளதேச நாட்டிலிருந்து மூன்று கோடி இஸ்லாமியர்கள் ஊடுருவியுள்ளனர். இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தவறாக சித்தரித்து இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு ஓட்டுக்காக அரசியல் செய்பவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவிய இஸ்லாமியர்களால் தான் பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் வசிக்கும் 15 கோடி இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: 'கால்கள் போனால் என்ன காதல் இருக்கிறது' - மலையாள காதல் கவிதை!