திருச்சி: எந்த வரலாறும் இல்லாதவர்கள் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் என நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்தார். ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ‘வரலாற்றை பாதுகாப்போம்’ விழிப்புணர்வு பொதுக் கூட்டம் திருச்சி, பாலக்கரையில் மாவட்ட தலைவர் பஜூலூர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "சரித்திரமே இல்லாத ஒரு கட்சி பாரதிய ஜனதா, அதன் மற்றொரு அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இவர்கள் சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை.
மொழி போராட்டத்திலும் ஈடுபடவில்லை. எந்த போராட்டத்திலும் போராடாத ஒரு அமைப்பு ஆர்.எஸ்.எஸ். சரித்திரத்தை பேச கூப்பிட்டால் அதற்கு அவர்கள் வர மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கு சரித்திரம் இல்லை. நமது நாட்டை இந்தியா என்கிறோம். அவர்கள் பாரத் என கூறுகிறார்கள்.
இந்தியா என்பது வரலாறு, அதை மாற்றி அமைக்க முடியாது. மேலும், பாசிச பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களை பட்டியலிட்டும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவை தோல்வி அடைய செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ்க்கு ஜனநாயக போராளி விருதும், வரலாற்று ஆய்வாளர் திவான்க்கு வரலாற்று ஆய்வு பணியை கௌரவிக்கும் விதமாக வரலாற்று பேராசான் எனும் விருதும் வழங்கப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்தில் வரலாற்றை திரித்து விஷயத்தை கக்கும் மத்திய பாஜக அரசு கண்டித்தும், முஸ்லிம் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தி தரவேண்டும், சாதி கொடுமைகளை அரசு தடுக்க வேண்டும், பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும், வடநாட்டில் நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க தவறியதை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்டச் செயலாளர்கள் கனியமுதன், புல்லட் லாரன்ஸ், முசிறி கலை, மணப்பாறை ஆற்றல் அரசு மற்றும் ஏகத்துவ இஸ்லாமிய ஜமாஅத் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அல்தாபி, மாவட்ட செயலாளர் ரபியுல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : Independence Day 2023 : கோவையில் சுதந்திர தினம் கோலாகலம்! தேசியக் கொடி வரலாற்றை சித்தரித்த மாணவர்கள்!