திருச்சி காந்தி மார்க்கெட் அருகேயுள்ள உப்புபாறை பகுதியை சேர்ந்தவர் விஜயரகு(39). இவர் பாஜக பாலக்கரை மண்டலச் செயலாளராக இருந்தார். இவர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டிலிருந்து காந்தி மார்க்கெட் நுழைவு வாயில் அருகேயுள்ள டீக்கடைக்கு டீ குடிக்கச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் சேர்ந்து அவரை வெட்டிப் படுகொலை செய்தனர்.
இச்சம்பவம் திருச்சியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக திருச்சியில் போராட்டம் அதிகளவில் நடந்து வரும் நிலையில், பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக பாஜக நிர்வாகிகள், இன்று காலை முதல் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு வந்து இறந்த விஜயரகுவின் உடலைப் பெற்று தந்த பின்னர்தான் இந்த பிரச்னை சுமூகமாக முடிந்தது.
இதனைத்தொடர்ந்து, இன்று இரவு சுமார் 10 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடையருகே ராமகிருஷ்ணா சந்திப்பு என்ற இடத்தில் முகமது இசாக் (21) என்ற இஸ்லாமிய இளைஞர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றது யார் என்பது தெரியவில்லை.
காலையில் பாஜக நிர்வாகி கொலையால் பதற்றமான சூழ்நிலையில் இருந்த திருச்சி மாநகரம், தற்போது இஸ்லாமிய இளைஞர் படுகொலையால் உச்சகட்ட பதற்றத்தை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி; வெளியான சிசிடிவி