ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநிலத் தலைவர் அல்தாபி திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. வரலாற்றில் இதை துக்க நாளாகக் கருதுகிறோம். சொந்த மக்களுக்கு எதிராக நடத்தப்படும் போர் இது. விவாகரத்து என்பது தனிநபர் சட்டமாக இருந்தது, தற்போது கிரிமினல் சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள முத்தலாக் நடைமுறையால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுவது மோசடியான செயலாகும். புதிய சட்டத்தின் மூலம் கணவரை மூன்று ஆண்டுகள் சிறையில் அடைத்துவிட்டால், இருவரும் நிரந்தரமாக பிரியக்கூடிய சூழல் ஏற்படும். இருவரும் இணைவதற்கான வாய்ப்பே கிடைக்காது. இஸ்லாமிய குடும்பத்தை அழிக்கக் கூடிய செயலை மத்திய அரசு செய்துள்ளது.
புதிய சட்டத்தால் பாலின சமத்துவம் கிடைக்கும் என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது. ஏற்கனவே உள்ள முத்தலாக் நடைமுறையில் இருபாலருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்டது அநீதியாகும். 25 கோடி இஸ்லாமியர்கள் இருக்கும் நிலையில் இரண்டாயிரம் பேர் மட்டுமே இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்காகவே மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. மற்றபடி இஸ்லாமியப் பெண்கள் மீது எவ்வித அக்கறையும் கிடையாது.
ஜெயலலிதா இருந்தபோது முத்தலாக் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. வாக்கெடுப்பு சமயத்தில் புறக்கணித்துவிட்டு வெளியே வந்தது அச்சட்டத்திற்கு மறைமுக ஆதரவாகத்தான் அமைந்துள்ளது. உள்ளே இருந்துகொண்டு எதிர்ப்பைப் பதிவு செய்திருக்க வேண்டும். அவர்கள் வெளிநடப்பு செய்ததால் சட்டத்திற்கு எதிர்ப்பு குறைந்துவிட்டது. இது முஸ்லீம்களுக்கு செய்த துரோகம். உடனடியாக மத்திய அரசு முத்தலாக் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்" என்றார்.