தமிழ்நாடு நகர்ப்புற இசைக்கலை பெருமன்ற திருச்சி மாவட்டம் சார்பில், அதன் தலைவர் பழனிபாரதி தலைமையில் தப்பாட்ட கலைஞர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று (மே 27) திரண்டு வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலகம் முன்பு தப்பாட்டம், தாரை, தப்பட்டை உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்து நடனம் ஆடினர்.
பின்னர் ஆட்சியர் சிவராசுவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் ”ஊரடங்கு காரணமாக மார்ச் 23ஆம் தேதி முதல் நாங்களும், தகுந்த இடைவெளியை கடைபிடித்து வருகிறோம். மேலும் இந்த ஊரடங்கால் எங்களது கிராமியக் கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், தாரை உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் எங்களது குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது. தமிழ்நாடு அரசானது பிற அனைத்து தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியது போல, எங்கள் தொழிலாளர்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அரசு வழங்க வேண்டும். மேலும் எங்களது கலைகளை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.
இதையும் படிங்க: 2 மாதங்களுக்கு பின் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் சென்னை!