திருச்சி: மணப்பாறை அடுத்த பொய்கை மலை வனப்பகுதியை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டுப் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட கடைக்காரர்கள் குப்பைகளை கொட்டி வந்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் விடுத்த கோரிக்கையின் படி ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் பகல் நேரங்களில் குப்பைகளை கொட்டும் வாகனங்களை பிடித்து, திருப்பி அனுப்பி வந்தனர்.
இந்நிலையில் இரவு நேரங்களில் சிலர் சட்டவிரோதமாக கொட்டிச் சென்ற குப்பை மற்றும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அவற்றை துப்புரவு பணியாளர்கள் சாலை ஓரத்தில் பற்ற வைத்ததால் கரும்புகை கிளம்பியது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கண் எரிச்சலுடன், சிரமப்பட்டு கடந்து சென்றனர்.
இதையடுத்து, இரவு நேரங்களில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுவதை கண்காணிக்க ஊராட்சி மன்ற நிர்வாகம், நெடுஞ்சாலை துறை மற்றும் வனத் துறையினர் இணைந்து சிசிடிவி கேமரா பொருத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான பயணம் செய்த சிறார்கள்