திருச்சி சுங்கச்சாவடி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இவ்வியக்கத்தின் மாநிலத் தலைவர் சம்சு லுகா தலைமையில் நடந்த கூட்டத்தில், மாநிலப் பொதுச்செயலாளர் முகமது, பொருளாளர் அப்துல் ரஹீம், துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் முகமது செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டிலிருந்து பல கோரிக்கைகள் பிரதமர் மோடியிடம் முன்வைக்கப்பட்டன. அப்போதெல்லாம் அதை நிறைவேற்றாமல் தற்போது அரசியல் காரணங்களுக்காக சென்னை வந்துள்ள மோடி நாடகம் ஆடுகிறார். இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது.
- நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும்,
- எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்,
- சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பங்களிப்பை வழங்க வேண்டும்
என்பன போன்ற தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தற்போதுவரை செவிசாய்க்கவில்லை. தமிழ்நாட்டில் புயல் மழையால் பாதித்தபோது பல இழப்புகள் ஏற்பட்டன.
அப்போதெல்லாம் நேரில் ஆறுதல் கூற வரவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பது கிடையாது. ஆனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சூழ்நிலையை அறிந்து செயல்படுவோம்.
மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவாக இருந்துள்ளது. பாஜகவைவிட அதிமுக முழு பாஜகவாக மாறியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தேவேந்திர குல வேளாளர் அரசாணை - சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு விழுக்காட்டில் கை கொடுக்குமா?