அகில இந்திய தனியார் கல்லூரி பணியாளர் சங்கத்தின் தலைவர் கார்த்திக் இன்று திருச்சி செய்தியாளர் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "டி.ஆர்.பி தேர்வு வாரியம் 2017 ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,058 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முறைகேட்டில் 196 பேர் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. முறைகேடு நடந்ததால் அந்த தேர்வில் வெற்றி பெற்ற யாருக்கும் இதுவரை பணிகள் வழங்கப்படவில்லை. முழு தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டனர்.
தற்போது டி.என் பி.எஸ்.சி தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது. அந்த முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தவிர மற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் இரண்டு தேர்வு வாரியங்கள் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக வெவ்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது என்பது ஏற்புடையதல்ல.
டி.என்.பி.எஸ்.சியில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தவிர மற்றவர்களுக்கு பணி வழங்கப்படுவது போல் டி.ஆர்.பி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேர் தவிர மற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக காலியாக உள்ள 400 பணியிடங்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வு நடத்த வேண்டும். கணினி சார்ந்த தேர்வு என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் அதில் பிற அமர்வுகளில் நடந்த மதிப்பெண்களை ஒருங்கிணைப்பதில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. நவீன முறையில் நவீன மோசடியும் நடக்கிறது.
அதை கண்டுபிடிக்க தாமதமாகும். ஆகையால் இவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பல லட்சம் பேரை அழைக்காமல் வெற்றி பெற்றவர்களை மட்டும் அழைக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தர்பார் படத்தால் நஷ்டமடைந்தவர்களுக்கு அரசு உதவும்' - அமைச்சர் கடம்பூர் ராஜு