திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் மாற்றுத் திறனாளி பயனாளர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “தற்போது இந்த விழாவில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று 9.74 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை 472 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
இதுபோல் அனைத்துத் துறைகளிலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிவருகிறார். அதனால் இந்த ஆட்சிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.
இதனையடுத்து அமைச்சர் வளர்மதி பேசுகையில், “திருச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்துகொண்டு நல்ல நிலையில் இருப்பவர்களுக்குத் திருமண நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் 2011-12ஆம் ஆண்டு முதல் திருச்சி மாவட்டத்தில் 425 பேருக்கு 51.34 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 50 விழுக்காடு காசோலையாகவும், 50 விழுக்காடு சேமிப்புப் பத்திரமாகவும், தங்க நாணயமாகவும் வழங்கப்பட்டு உள்ளது.
2020-21ஆம் ஆண்டிற்கு 50 நபர்களுக்கு 16.5 லட்சம் ரூபாய் திருமண நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுயவேலைவாய்ப்பு மானிய கடனாக இதுவரை 508 மாற்றுத்திறனாளிகளுக்கு 62.81 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கடன் தொகைக்கான மானியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.