திருச்சி மாவட்டம், சத்திரம் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (மே.20) ஆய்வு செய்தார். அப்போது பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளின் நிலவரம் குறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகராட்சி பொறியாளர் அமுதவல்லி, உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, "திருச்சி சத்திரம் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்திரம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் 3 மாதத்தில் முடியும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கு 26 பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 53 கடைகள் கட்டப்பட்டுள்ளன. ஏற்கெனவே சத்திரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு உபயோகமான வகையிலும், போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையிலும் இந்தப் பேருந்து நிலையம் அமையும்.
திருச்சி அரியமங்கலத்தில் 36 ஏக்கரில் குப்பைக் கிடங்கு உள்ளது. மண்டலம் வாரியாக குப்பைகளைப் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது அடுத்த 6 மாதத்தில் முடிவடையும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு 1,500 டன் வீதம் குப்பைகள் பிரிக்கப்படுகின்றன. 6 முதல் 7 ஆண்டுகளில் இது முழுமையாகப் பிரிக்கும் பணி முடிவடையும்.
மீதமுள்ள குப்பைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அப்போது முடிவு செய்யப்படும். பள்ளிக்கல்வித் துறைக்கு இயக்குநர் பதவியை நீக்கியதற்குப் பல தரப்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். அதேபோல் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு என்னென்ன அதிகாரங்கள் கொடுக்கப்படும் என்பதையும் முதலமைச்சர் முடிவு செய்வார்.
12ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். மாணவர்களின் ஆரோக்கியம் தான் முக்கியம். அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். மாணவர்கள் வீட்டில் இருந்தாலும் வாட்ஸ்அப் மூலம் அவர்களுக்கு அசைன்மெண்ட் கொடுக்கும் பணி முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: ஆக்ஸிஜன் விநியோகத்தை கண்காணிக்க சிறப்பு பணிக்குழு