திருச்சி மாவட்டம் புத்தூர் நான்கு ரோட்டில் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட் செயல்பட்டுவந்தது. இந்த மார்க்கெட் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த காரணத்தால், 1993ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கிருந்த வியாபாரிகளுக்கு புத்தூர் சின்ன மைதானத்தில், புதிதாக கட்டப்பட்ட காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக 60 வியாபாரிகள் இங்கு காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்துவருகின்றனர். வியாபாரிகள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரியை முறையாகச் செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்தப் பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் இருப்பதால் துர்நாற்றம் வீசுவது, இடநெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, கடைகளை அகற்றப் போவதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதனால் அங்கு வியாபாரம் மேற்கொண்டு வருபவர்கள், ”மார்க்கெட்டை நம்பிதான் எங்களது வாழ்வாதாரம் உள்ளது. அதனால் எங்களுக்கு மாற்று ஏற்பாடு ஏதேனும் செய்து கொடுக்கவேண்டும். செய்யப்பட்ட மாற்று ஏற்பாடு குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வைத்து 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
பின்னர், மார்க்கெட்டை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் தங்களது கோரிக்கை மனுவை அவர்கள் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:வேலூரில் தற்காலிக சந்தை: காய்கறி வியாபாரிகள் கண்டனம்