திருச்சி மாநகருக்குள் காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை சரக்கு லாரிகள் வருவதற்கு காவல் துறை தடை விதித்துள்ளனர். அதேபோல் மாலை 4 மணிக்கு மேல் இரவு 9 மணிவரை சரக்கு வாகனங்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. ஆனால், தற்போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிவரை லாரிகள் மாநகருக்குள் வர காவல் துறை தடை விதித்துள்ளது. இந்தத் தடையை அமல்படுத்துவதால் தங்களுக்கு தொழில் பாதிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்தனர்.
மேலும், மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிவரை போக்குவரத்து நெருக்கடி குறைவாக உள்ள நேரம் என்பதால், அப்போது லாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக காவல் துறைக்கும்-லாரி உரிமையாளர்களுக்கும் இடையேயான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் வேதரத்தினம் தலைமை வகித்து, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர், மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிவரை நகருக்குள் லாரிகளை அனுமதிப்பது குறித்து உயர் அலுவலர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கமலக்கண்ணன், கோட்டை சரக காவல் துறையினர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அதிக எடை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகள், தொடரும் விபத்துகள்