திருச்சி: மணப்பாறையில் மதிமுக மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் தலைமையிலான மதிமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் இன்று (ஜன.30) ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையாக, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் மணப்பாறையில் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
இதற்காக, மதுரை சாலையில் உள்ள மதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு, ரயிலை மறிக்க சென்ற போராட்டக்காரர்களை கூடுதல் துணை கண்காணிப்பாளர் பால்வண்ணன், மணப்பாறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன், காவல் ஆய்வாளர் கோபி, ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆகியது. இதனைத்தொடர்ந்து மதிமுகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் நுழைவுவாயில் முன்பு நின்று கோஷம் எழுப்பினர். அப்போது போலீஸ் பாதுகாப்பை மீறி திண்டுக்கல்லில் இருந்து ரயிலில் வந்த மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா உள்ளிட்ட மூன்று பேர் மதிமுக கொடி அசைத்து மணப்பாறைக்கு அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் 70-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டக்காரர்களை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பட்டியலின இளைஞரை தரக்குறைவாகப் பேசிய ஊராட்சி தலைவர் கைது - பொதுமக்கள் கண்டனம்