திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கீழ எருதிகவுண்டம்பட்டியைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் விஜயகுமார், பெயின்டராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம், தே.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த போதும்பொண்ணுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்றரை வயதில் விஜயதரன் என்ற மகனும், ஒன்றரை வயதில் விசிமிதா என்ற மகளும் உள்ளனர்.
இதையடுத்து போதும்பொண்ணு தனக்கு தலைசுற்றுகிறது என்று திடீரென நேற்று (ஆக. 30) கூறியதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து மாமனார் கோபால் 108 ஆம்புலன்ஸூக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சையில் இருந்த போதும்பொண்ணு வெகுநேரம் கழித்து, தான் எலி மருந்து உட்கொண்டதாக கூறியுள்ளார். இதையடுத்து நேற்று நள்ளிரவு சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெண்ணின் தந்தை புகார்
இதுகுறித்து பெண்ணின் தந்தை கலைமணி அளித்தப் புகாரின் அடிப்படையில் மணப்பாறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும்,திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகளே ஆகியுள்ளதால், திருவரங்கம் வருவாய் கோட்டாட்சியர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளார். இரண்டு குழந்தைகளின் தாய், எலி மருந்து உட்கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கஞ்சா பழக்கம்: திருத்த முயன்ற அக்கா கணவரை அடித்துக்கொன்ற இளைஞர்