கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த ரம்யாப் என்பவர் திருச்சி சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவருகிறார். மேலும் காஜாமலை பகுதியில் அறை எடுத்து தங்கி படித்துவருகிறார். இந்நிலையில், ரம்யா வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரிடம் தகராறில் ஈடுபட்டு ரம்யா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடினார்.
ரம்யா உடனடியாக தண்ணீர் ஊற்றித் தீயை அணைத்துக் கொண்டார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் ரம்யாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்துக் காவல் துறையினர் விசாரித்தபோது அந்த நபர் காரைக்காலைச் சேர்ந்த தவச்செல்வன் என்றும் அவர் ரம்யாவை காதலித்ததாகவும் சில காலமாக ரம்யா அவருடன் பேசாமல் இருந்ததால் ஆத்திரத்தில் தீ வைத்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தவச்செல்வனை தேடிவருகின்றனர்.
மாணவி எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சட்டக் கல்லூரி முன்பு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.