விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே உள்ள டாஸ்மாக்கில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மது அருந்தியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், 6 பேர் சேர்ந்து இசக்கி என்பவரை தாக்கி உள்ளனர். இதில், காயமடைந்த இசக்கி, ரத்த காயங்களுடன் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் தாக்கியவர்களை தேடிய போது, அவர்கள் நேரு சிலை பின்புறம் உள்ள மற்றொரு தனியார் மதுபானக் கூடம் அருகே இருந்துள்ளனர். பின்னர் அவர்களை பிடித்து விசாரித்த வடக்கு காவல் நிலைய காவலர்களான ராம்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மறுநாள் காலை காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த கும்பல் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலர் கையில் இருந்த லத்தியை பிடுங்கி அவரையே தாக்க தொடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க : நெல்லையில் ஆயுதங்களுடன் தாக்கி கொண்ட சிறுவர்கள்; பகீர் கிளப்பும் வீடியோ!
இதை தடுக்க சென்ற மற்றொரு காவலரையும் அந்த கும்பல் ஆபாசமாக திட்டிக் கொண்டே சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த காவலர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மற்ற காவலர்கள், இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காவலர்களை தாக்குவது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து தாக்கப்பட்ட காவலர்கள் அளித்த புகாரின் பேரில், கீழ ஆவரம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா, பாண்டியராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்