திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே அல்லூர் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் வீட்டை உடைத்து திருட முயன்றதாகக்கூறி, அக்கிராம மக்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்தனர். அப்போது அதில் ஒருவர் பொது மக்களை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளார்.
மற்றொரு நபர் மரக்கட்டையால் பொது மக்களைத் தாக்கி, அங்கிருந்த இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்தியுள்ளார்.
இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த சாம்பசிவம், ராதா ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, தாக்குதல் நடத்திய நபரை கையும் களவுமாக பிடித்த அக்கிராம மக்கள், அவரைக் கயிற்றால் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
மேலும் தப்பிக்க முயன்ற நபரையும் பிடித்துள்ளனர். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் காவல் துறையினர், படுகாயமடைந்த நபரை மீட்டு, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அந்நபர்கள் இருவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் (25), திபூர் (30) என்பது தெரியவந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திபூர் எனும் இளைஞர் இன்று (டிச.26) அதிகாலை உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், இரண்டு இளைஞர்களும் உண்மையிலேயே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தான் பணியாற்றிய காவலரிடமிருந்து பணத்தை திருடிய வாகன ஓட்டுநர் கைது