திருச்சி மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”அரசியலில் இருந்து இத்தனை காலம் ஒதுங்கியிருந்ததால்தான் நதிக் கரையும் போனது நாகரீகமும் போனது. தீமை நம்மை சூழ்ந்துவிட்டது. அதனை நாம் அகற்ற வேண்டும். அதற்கான அரிய வாய்ப்பு ஏப்ரல் 18ஆம் தேதி வருகிறது.
தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்கமாட்டார்கள் என வடநாட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். வடநாட்டில் காமராஜர் என்று பெயரை காட்டுங்கள், அண்ணாத்துரை என்று பெயரை காட்டுங்கள், கக்கன் என்று பெயரை காட்டுங்கள் இருக்காது. ஆனால் இங்கு நூறு காந்திகளை காட்டுவேன்.
தெற்கை தேய்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நாமும் தேய்ந்துகொண்டே இருக்கிறோம். அதற்காக பிரிந்துபோக வேண்டியதில்லை. கூடவே இருந்து குரலை உயர்த்த வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் யாரும் சம்பாதிக்க வரவில்லை. வாக்காளர்களும் தேர்தலில் சம்பாதிக்கக் கூடாது. எங்களுக்கு வாக்கு கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் உயிரை சேர்ந்து மீட்போம்” என்றார்.