திமுக திருச்சி வடக்கு மற்றும் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தலைமையில் தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.என். நேரு, "திமுக சார்பில் திருச்சி மாவட்டத்தில் முப்பெரும் விழா நடத்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் அனுமதி கேட்டோம். அதற்கு அவர் அனுமதி அளித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மாதத்தில் 15 நாள்கள் வெளியூர் சுற்றுப்பயணம் செய்வார். தற்போது கரோனா காலத்தில் எவ்வித இடையூறும் வரக்கூடாது என்பதற்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் உரையாற்றியுள்ளார்.
அந்த வகையில் திருச்சியில் 9 தொகுதிகளிலும் ஒரு லட்சம் தொண்டர்களைத் சந்திப்பதற்காக முப்பெரும் விழா நடத்த ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்காகதான் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியை இதர இயக்கங்கள் மேற்கொண்டுவருகின்றன. நாங்களும் முப்பெரும் விழாவை முன்னிட்டு ஸ்டாலினை முதலமைச்சராக்கும் பணியை இன்றிலிருந்து மேற்கொள்கிறோம்" என்றார்.
தொடர்ந்து தலித் ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்தது குறித்து பேசிய அவர், "தலித் ஊராட்சித் தலைவரை தரையில் அமர செய்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது போன்ற செயல்களை திமுக வன்மையாக கண்டிக்கிறது. அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தே ஆக வேண்டும்
இதேபோல் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது நான்கு தலித் ஊராட்சிகளில் தேர்தலே நடத்த முடியாத நிலை இருந்தது. அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, உள்துறை அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்துதான் அந்த ஊராட்சிகளில் தேர்தலை நடத்தி தலித் தலைவர்களை உருவாக்கினர்" என்றார்.
இந்த கூட்டத்தில் திமுக மாநகர செயலாளர் அன்பழகன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.