திருச்சி: மணல் மற்றும் எம்.சாண்ட் லாரி உரிமையாளர் ஒருங்கிணைந்த நலச் சம்மேளனத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று (ஜூன் 25) நடைபெற்றது. இந்தக் கூட்டம், மாநிலத் தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முழவதும் இருந்து மணல் லாரி உரிமையாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் குறித்து விவாதித்தனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பன்னீர் செல்வம், ''தமிழ்நாட்டில் மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 26 மணல் குவாரிகள் இயங்குவதாக கூறுகிறார்கள். ஆனால், தமிழ்நாடு முழுவதும் நான்கு, ஐந்து குவாரிகள் தான் இயங்குகின்றன. அதனால், மணல் தட்டுப்பாடு ஏற்படுகின்றது.
மணல் லாரி உரிமையாளர்களும் அதனை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் இதனால் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் அதிக அளவு குவாரிகளைத் திறந்து அனைவருக்கும் மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணலுக்கு மாற்றாக இன்று எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், எம்.சாண்ட்டை அதன் விற்பனையாளர்கள் சரியான முறையில் தயாரிப்பது இல்லை.
விதிமுறைகளுக்கு மாறாக கலப்படமான பழுதடைந்த எம்.சாண்ட் மணலைத் தருகிறார்கள். இதனால் எம்.சாண்டை கொண்டு கட்டப்படும் கட்டடங்கள் உறுதி இல்லாமல் இருக்கின்றன. காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் சோதனை என்ற பெயரில் எங்களிடம் அபராதம் விதிக்கிறார்கள். குவாரிகளைக் கண்டு கொள்வதில்லை. தமிழ்நாட்டில் 412 எம்.சாண்ட் குவாரிகளுக்கு மட்டும் அனுமதி உள்ளது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
எம்.சாண்ட் காடுகளை, மலைகளை அழித்து தயாரிக்கிறார்கள். அதனால், இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. மணல் இயற்கையான வளம். அதில் கட்டப்படும் கட்டடங்கள் தான் உறுதியானதாக இருக்கும். எனவே, தான் அதிக அளவு மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும் என்கிறோம்.
சமூக ஆர்வலர்கள் சுய நலத்துக்காக ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆற்றில் மணல் எடுப்பதால் எந்த வளமும் பாதிக்கப்படுவதில்லை, தண்ணீர் அதிக அளவு ஆற்றில் வரும் போது மீண்டும் மணல் வந்து சேரும். எனவே, அனைவரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால், மிக விரைவில் திருச்சி தலைமைப் பொறியாளர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம்'' என எச்சரித்தார்.
இதையும் படிங்க: கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து சுமார் ரூ.1 கோடி மோசடி - சிக்கிய நகை மதிப்பீட்டாளர்!